Friday, November 3, 2017

தோப்புக்கரணம்

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை.

Sunday, July 30, 2017

ஐ.ஐ.டி.,யின் இலவச படிப்புகள்!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்.,(ஐ.ஐ.எஸ்சி.,)ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும், சான்றிதழ் படிப்பினை அனைவரும் படிக்கும் வகையில், இணையதளம் மூலம் இலவச கல்வி சேவையை வழங்கப்படுகிறது!

Wednesday, February 15, 2017

தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப்போடு!

தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப் போடுங்கள். ஏனெனில், தள்ளித் தள்ளிப் போடுவது நமது வேலைகளை மட்டுமல்ல; நமது வெற்றிகளையும் தான்!

Thursday, December 31, 2015

வெற்றிக்கு தேவை இலக்கு!

வெற்றி சிலரின் ஏகபோகச் சொத்து அல்ல! அது ஒரு சாகரம்- கடல். வெற்றியைத் தேடிச் செல்கையில் நாம் எத்தனை பெரிய நம்பிக்கைப் பாத்திரத்தைச் சுமந்து செல்கின்றோமோ அந்த அளவில் வெற்றியைச் சுமந்து வரலாம்!

சவால்களுக்குச் சவால்விடு!

போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவு போன்றது. அதில் சுவை இருக்காது’! என்றார் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். போராட்டம் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்போராட்டம்; இன்னொன்று புறப்போராட்டம்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!

நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான  தகுதித்தேர்வே ’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்’  (சி.டி.இ.டி.,).

Friday, July 24, 2015

+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி!

 இயக்குநர் பேச்சு+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி! இயக்குநர் பேச்சு
தொடர்ந்து கற்கும் ஆசிரியரால் மட்டுமே, பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களை சிறப்பாக கற்பிக்க முடியும்,''என, தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், திருச்சியில் பேசினார்.திருச்சி, பாரதிதாசன் சாலையில்உள்ள கேம்பியன் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் நடந்தது.
இணை இயக்குனர் முத்து பழனியப்பன், இணை இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பொன்னையன், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், 2014-15ம் ஆண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரையும் பாராட்டி சான்று வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:
தமிழக பள்ளி கல்வித்துறை மூலம், 32 மாவட்டங்களை, 9 மண்டலங்களாக பிரித்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். கடலூர், வேலூரை தொடர்ந்து, திருச்சி மண்டலத்தில், நடக்கிறது.
திருச்சி மண்டலத்தில், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், திருச்சி மாவட்டம், ப்ளஸ் 2 தேர்வில், 95.3 சதவீதமும், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 97.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், கடந்தாண்டு, 10வது இடத்திலிருந்து முன்னேறி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், 89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அடுத்து தலைமுறையை உருவாக்ககூடிய, 1.32 கோடி மாணவ, மாணவியர் பள்ளிகளில் படிக்கின்றனர். இதில், 8.32 சதவீதம் பேர் ப்ளஸ் 2வும், 10.56 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.ஸி.,யும் படிக்கின்றனர்.
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் தோல்வியால், ஆண்டுதோறும் மாவட்டந்தோறும், 10 பேர் வரை தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, தோல்வியை தாங்கும் மனப்பக்குவத்தை சொல்லிக் கொடுக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும்.
பருவத்திற்கு ஏற்ப மாணவ, மாணவிகளை பக்குவப்படுத்துவது ஆசிரியரின் கடமை. அது பள்ளியில் மட்டுமே முடியும். தொடர்ந்து கற்கும் ஆசிரியரியால் மட்டுமே, பாடங்களை சிறப்பாக கற்பிக்க முடியும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பள்ளியில் படிப்பு மட்டுமின்றி, பாதுகாப்பும் அவசியமாகும்.
நடப்பு கல்வி ஆண்டில், திருச்சி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை, 100 சதவீதமாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தை, 95 சதவீதமாக உயர்த்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். மாவட்டத்தில் சில பள்ளிகளில், 50 பேரும், சில பள்ளிகளில் 220 பேர் வரையிலும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 படிக்கின்றனர்.
இவர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் பின் தங்கிய மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு கூடுதல் மதிப்பெண் பெற ஏதுவாக, புத்தகம் மற்றும் சி.டி.,யை வழங்கியுள்ளோம்.
இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்துள்ள, பல ஆயிரம் கோடி நிதியை மூலதனமாக்கி, சிறந்த கல்வியை வழங்கி, எஸ்.எஸ்.எல்.ஸி.,மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்

Thursday, May 21, 2015

கல்வியியல் நோக்கில் இருந்து விலகும் பள்ளிக்கல்வி துறை : கல்வியாளர்கள் கவலை


'பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது; கல்வியியல் நோக்கத்தில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகிச் செல்கிறது.கற்பித்தல் முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் கட்டாயம் மாற்றம் அவசியம்' என, கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி:
பத்தாம் வகுப்பு தேர்வில், நல்ல 'ரிசல்ட்' கிடைத்துள்ளது. அறிவியல் பாடத்தில், 10 மாணவர்களில், ஒருவர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளது, ஆச்சரியமாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், 400 மதிப்பெண்என்பது, சரித்திரமாக இருந்தது; இப்போது, 499, 500 மதிப்பெண் எல்லாம் எடுக்கின்றனர். மாநிலத்தில், முதல் மூன்று இடங்களை பிடித்தோர் எண்ணிக்கை, 700க்கு மேல் போகிறது; அடுத்தடுத்த ஆண்டுகளில், 2,000 ஆக உயரும்.இது, சரியான அறிகுறி அல்ல. அகில இந்திய நுழைவுத்தேர்வுகளில், நாம், 29வது இடத்தில் இருக்கிறோம்; இன்னும் பின்னடைவு ஏற்படும். புள்ளிவிவரங்கள்பார்க்கவும், கேட்கவும் நன்றாக உள்ளது.உண்மையில், மாணவர்களின் திறன் சார்ந்தாக இல்லை. மதிப்பெண் குவிந்ததற்கு, வினாத்தாள் மிக எளிமையாக தயாரிக்கப்பட்டதே காரணம். வினாத்தாள், 40 சதவீதம்எளிதாகவும்; 30 சதவீதம் சற்று கடினமாகவும்; 30 சதவீதம், பாடத்திட்டம் சார்ந்து, அதே நேரத்தில், புத்தகத்தில் இல்லாமல், மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில், அமைய வேண்டும்.அதுதான், மாணவர்களின் உண்மையான திறனை வெளிப்படுத்தும்; அதற்கேற்ப வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் கொண்டு வருவது, காலத்தின் கட்டாயம்.
பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ்:
மாணவர்கள், ஆசிரியர்கள் உழைத்து வெற்றி பெற்றுள்ளனர்; அவர்களை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில், கல்வியியல் செயல்பாட்டில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகி, சான்று அளிக்கும் துறையாக மாறி உள்ளது. கல்வி ஏற்பாட்டின் நோக்கம் நிறைவேறுகிறதா என, கணக்கிடுவதற்கு பதிலாக, மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்று கணக்கிடப்படுகிறது. தனியார் பள்ளிகளை பார்த்து, அரசு பள்ளிகளும் கூட மதிப்பெண் பெற வைப்பது தான், நோக்கம் என வந்துவிட்டன. இது, கற்றல் சமூகத்திற்கான முறை கிடையாது; இந்த முறை மாற வேண்டும். வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் முறை; மதிப்பீட்டு முறையும் மாறினால் தான், கல்வி நிலை உயர்ந்ததாக கருத முடியும். தேர்ச்சி விகிதம், கூடுதல் மதிப்பெண்ணைவைத்து, கல்வித்தரம் உயர்ந்து விட்டதாக கருத முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தேர்வு முடிவுகள் மிகுந்த கவலை அளிப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத கல்வியாளர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறுகையில், 'தேர்வு முறை சரியாக இல்லை; இத்தனை சதவீத தேர்ச்சி வேண்டும்; 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை, இவ்வளவு இருக்க வேண்டும் என, அரசு தரப்பு கூறுவதை, நிறைவேற்றும் வேலையை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது; இது, ஆரோக்கியமானது அல்ல; மாணவர்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதாக, இருக்க வேண்டும்; மதிப்பீட்டு முறையில், கட்டாயம் மாற்றம் வேண்டும்' என்றனர்.

Sunday, April 5, 2015

கேள்வி கேட்பது ஒரு கலை!

பதில் சொல்வதை விட கேள்வி கேட்பதற்கும் திறமை வேண்டும். குழந்தைகளுக்கு கேள்வி கேட்க கற்றுக் கொடுக்க தேவையில்லை. ஏனெனில் மழலைப் பருவத்தில் கேள்வி கேட்கும் துடிப்பு இயற்கையாகவே இருக்கிறது. கூச்ச சுபாவம் இல்லாததும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால் வளர வளர கேள்வி கேட்பதை விட்டு விடுகிறோம். இது பள்ளி செல்லும் நாட்கள் முதல் கல்லூரி, அலுவலகம் என எதிர்காலம் முழுவதும் நீடிக்கிறது. இதனால் சரியான திறமை இருந்தும் வெளிகாட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
கேள்வி கேட்பது ஒரு கலை. கேள்வி கேட்கும் தோரணையை வைத்தே அவரது புத்திசாலித்தனத்தை அறிந்துவிட முடியும் என்பதால் கூட, கேள்வி கேட்டால் நமது அறியாமை வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது.
கேள்வி கேட்பவரது அறிவு மட்டும் வெளிப்படுவதில்லை; அவரது தன்னம்பிக்கையும் சேர்த்துதான். வகுப்பறை, அலுவலகம், பொது இடங்களில் கேள்வி கேட்பதற்கு தினமும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
ஆனால் சிலர் மட்டுமே, சரியாகவும், துல்லியமாகவும் கேள்வி கேட்கின்றனர். எனவே கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொண்டால், பல வழிகளிலும் நமக்கு உதவும்.

வங்கி அதிகாரி விருத்தாசலம் விளக்குகிறார் எளிதில் கல்விக்கடன் பெறுவது எப்படி

"உரிய ஆவணங்கள் இருந்தால், உயர் கல்வி படிப்பதற்காக வங்கிகளில் எளிதில் கல்விக் கடன் பெற முடியும்" என மதுரை ஸ்டேட் வங்கி உதவிப் பொதுமேலாளர் விருத்தாசலம் தெரிவித்தார்.மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'கல்விக் கடன்' குறித்து அவர் பேசியதாவது:
நாட்டின் வலிமையை நிர்ணயிப்பது கல்வி. பணம் இல்லை என்பதற்காக ஒரு மாணவருக்கு கல்வி தடைபடக் கூடாது என்பதால் வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதில் 26 வகையான பொதுத்துறை வங்கிகள் தான் அதிக கல்விக் கடன் வழங்குகின்றன. அனைத்து வகை யு.ஜி., பி.ஜி., படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லூரி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பிற்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு படிப்புகளுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம்,வெளிநாட்டில் படிக்க அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. ரூ.4 லட்சம் வரையான கடனுக்கு பெற்றோர் உத்திரவாதம் தேவையில்லை. சிறப்பு பிரிவின் கீழ் ரூ. 8 லட்சம் வரை கடன் பெற்றால் 5 சதவீதம் முன்பணம் செலுத்தவேண்டும். வெளிநாட்டு படிப்பு என்றால் 15 சதவீதம் பணம் செலுத்த வேண்டும். படிப்பு முடிந்து ஓராண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். வங்கிகளுக்குள் வட்டி விகிதம் மாறுபடும். மாணவிகளுக்கு அரை சதவீதம் வட்டி தள்ளுபடி உண்டு. பத்து ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் எளிதில் கல்விக் கடன் பெறலாம் என்றார்.
தேர்வில் 'பிட்' கலாசாரம் தமிழகத்தில் வந்தது எப்படி?
பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. தமிழகத்தில், 8.6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்த தடவை பீகாரைப் போல பெருமளவில் காப்பி அடிக்கவில்லை என்ற ஆறுதல் இருந்தாலும், சில சம்பவங்கள்தமிழகத்தை அதிரச் செய்தன. இந்த ஆபத்தான கலாசாரம் எப்படி வந்தது?
இதை முற்றிலும் நீக்க முடியுமா என்பதற்கும் விடைகாண்பது சிரமம்.சமீப காலங்களில், தேர்வு முடிவுகளில், அதிக உச்சத்தை தொடவைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் மாணவ,மாணவியரை தேர்வுக்கு, இயந்திர கதியில் அதிக அளவில் இயங்க வைக்கின்றனர்.சமீபத்தில், 'வாட்ஸ் அப்' மூலம் வினா-விடை விவரங்களை தந்த அதிர்ச்சி தகவல் வந்த பின், பல விஷயங்களை, முன்னாள் ஆசிரியர்கள் தமிழகத்தில் வெளிப்படையாக பேசுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 'கொள்குறிவகை'யில் 30 மதிப்பெண்களுக்கான வினாக்களுக்கு, ஏற்கனவே மாணவர்கள் சில தவறான உத்திகளை பின்பற்றும் வழக்கம், சில பள்ளிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.தேர்வு எழுதும் அறையில், நன்கு படிக்கும் தலையாய மாணவர் ஒருவர் அல்லது மாணவி,இக்கேள்விகளுக்கு ரகசிய சமிக்ஞை மூலம் மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் வழக்கம் இருக்கிறதாம்.தலையை தொட்டால், 'ஏ' என்ற விடை, மூக்கைத் தொட்டால், 'பி'சரியானது என்று சமிக்ஞை மூலம், 'பிட்' பாணிக்கு முன்னோட்டமாக இந்த முறை இருக்கிறதாம். இதை தேர்வு கண்காணிப்பாளர் எப்படி தடுக்க முடியும்?
கல்வி ஒருவியாபாரமாக ஆன அடையாளத்தின் ஒரு கூறு இது என்று பலரும் கூறலாம்.'வாட்ஸ் அப்' மூலம் பரவிய கலாசாரத்தை, இனி அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இம்மாதம், 20 தேதிக்குள் முடிந்து விடும் என்றும், அதற்குப்பின் வெளிவரும்முடிவுகளில், அதிகம் பேர்ரேங்க் பட்டியலில் முன்னணியில் நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.அத்துடன் மற்றொரு நல்ல அம்சமாக, புதிய சூழ்நிலைவரும் அறிகுறிகள் காணப்படுகின்றன.தமிழகத்தில் அதிகமாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை மற்றும் அதிககட்டண வசூல் இத்தடவை குறையும் என கூறப்படுகிறது. காரணம், முன்னணிகல்லூரிகள் கூட, சில துறைகளில், முழு அளவில் இடங்களை நிரப்ப முடியவில்லை.
மேலும் பல கல்லூரிகளில் குறிப்பிட்ட துறைகளுக்கான ஆசிரியர்கள் முனைவர் பட்டம் மற்றும் அதிக அனுபவத் தகுதி பெற வேண்டிய நிலை முற்றிலும் உருவாகவில்லை. அதிலும் சீர்திருத்தம் வரவேண்டும்.அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் போட்டி போடும் சூழ்நிலை, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறதா என்று எடைபோடும் காலம் வருகிறது. வேலைவாய்ப்பு தரும் கல்வி எது என்று ஆராயும் வகையில் சமுதாயம் சிந்திப்பது நல்ல அறிகுறி. அதை நோக்கி உயர் கல்வி சீராகப் போகிறது என்பதும் நல்ல அடையாளமாகும்.

Friday, March 27, 2015

வந்தாச்சு பிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்!
'பிட் அடித்து வாழ்வரே வாழ்வார் மற்றவரெல்லாம் பெயில் ஆகி போவார் 'என்ற பிட்டுலகின் பொன்மொழியில் நவீன பொன்மொழி 'அகர முதல பிட்டெல்லாம் வாட்ஸ் அப் பிட்டாகுமா? 'என்பதே. லேட்டஸ்ட் technology என நாம் நினைத்திருப்பதை சீனர்கள் சில வருடங்களுக்கு முன்னரே செய்து விட்டார்கள். நாம்தான் இதிலும் லேட்.
உலகிலேயே சீனாவில் உள்ள மாணவர்கள்தான் மிகவும் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி (HI TECH), பரீட்சையில் பிட் அடிக் கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம்தான் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்(007) ஜாக்கெட் உள்ளதாம். அதில் சிறிய கேமரா, தொலைபேசி, ஒட்டுக் கேட்கும் கருவி (காதுக்குள் மாட்டுவது) எல்லாம் இருக்கிறது.
மேலும் சிறிய ரக பேனாவில் உள்ள கேமராவில் பரீட்சைப் பேப்பரை அப்படியே படம் எடுத்து, வெளியே உள்ள நபர்களுக்கு அனுப்புகிறார்கள். வெளியே உள்ள நபர்கள் அதனை வாசித்து, உடனே பதிலை சொல்ல, காதுகளில் உள்ள சிறிய உள்வாங்கியில் அதனைக் கேட்டு எழுதுகிறார்கள் மாணவர்கள்.
இதற்கு மேல் ஒரு படி மேலேபோய், புற ஊதாக் கதிர்கள்(அல்ரா வைலட்) பேனாக்களை கொண்டு, விடை களை கைகளில் எழுதிக்கொண்டு, தேர்வு அகு சென்றுவிடுகிறார்களாம்பேனாவில் உள்ள புற ஊதாக் கதிர்களை கண்டறியும் லைட்டை அடித்து பார்த்தால் கைகளில் உள்ள விடை தெரிந்துவிடுமாம். ஆனால் இவர்கள் கைகளில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்று சாதாரண கண்களால் பார்த்தால் எதுவும் தெரியாது.
இப்படி அதி கூடிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து பிட் அடிக்கிறார்கள் சீன மாணவர்கள். இதனால் சீனாவில் பெரிய பரீட்சைகள் நடக்கும்போது போலீசார் அழைக்கப்பட்டு பலத்த சோதனைகள் நடத்தப்பட்டு, இதன் பின்னரே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
பரீட்சைக்கு எப்படி பிட் அடிக்க முடியும் என்று சொல்லித்தர மற்றும் அதற்கான பொருட்களை விற்க என்று அங்கே பல கடைகள் உள்ளனவாம்.
இதற்காக நம்நாட்டின் பிட்டுலகின் பிதாமகர்கள் அங்கே போய் பயிற்சி எடுக்க நினைத்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.

Saturday, March 7, 2015

கல்லூரிக்கு அட்மிஷன் போடவேண்டாமா?
அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்று நிறைய மாணவ மாணவிகள் முன்கூட்டியே முடிவெடுத்து விடுவதால் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் முக்கிய தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுப்பது தான் இன்றைய போட்டி சூழலில் அவசியமாகிறது.
ஆங்கிலம் அல்லது தமிழ் போன்ற மொழித் தேர்வுகளில் கூட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றாலும் குரூப் பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவது தான் கனவை நனவாக்கும். ஆகவே எல்லா தேர்வுகளுமே முக்கியம் என்ற மனோபாவத்தோடு இருப்பது வேண்டும்.
இன்று கட் ஆப் மதிப்பெண்கள் பார்த்துத் தான் கல்லூரி அட்மிஷன் தரப்படுகிறது என்பதால் மிகச் சரியாக திட்டமிட்டு, சரியான யுக்தியுடன், புத்தி சாதுரியத்துடன் தேர்வை அணுகி எல்லாப் பாடங்களிலும் அதிக பட்ச மதிப்பெண் பெற எல்லா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். இது மாணவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் குறுக்கு வழியில் பார்த்துக் கொள்ளலாம். பணம் கட்டி சீட் வாங்கி விடலாம் என்ற ஈஸி மனப்பாங்கு நிச்சயம் வேண்டாம்.
உங்கள் பெயர் பள்ளி பலகையிலோ, பத்திரிகையிலோ வராது போகலாம். ஆனால் அதற்காக ஆசைப்பட்டால் என்ன தவறு? எது செய்தாலும் நான் அதில் சிறந்து விளங்குவேன் என்பதே மிக நல்ல மனோபாவம். நீங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றால் உங்களுக்கு மட்டுமா பெருமை ? உங்கள் குடும்பத்திற்கு, ஆசிரியருக்கு, பள்ளிக்கு, உங்கள் மாநிலத்திற்கே பெருமை அன்றோ?
பள்ளி இறுதித் தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் உங்கள் வாழ்நாள் முழுதும் எல்லா இடங்களிலும் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்த படிப்பிற்கு, செல்லும் வேலைக்கு என்று எல்லா கட்டங்களிலும் உங்களை முன்னிலை படுத்தப் போகிற ஒரு தேர்வு இது என்பது மனதில் இருக்கட்டும். அதனை நினைவில் கொண்டு உங்கள் செயல்பாடுகள் அமையட்டும்.
இது போட்டி யுகம் நூற்றுக்கு நூறு என்பது கூட சற்று குறைவு தான் எனும் நிலை ஆகி விட்டது. எனவே நீங்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல என்று உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருக்கும் உலகுக்கும் நிரூபிக்கும் மிக முக்கிய சமயம் இது. பெஸ்ட் மட்டுமே கொடுங்கள். பெஸ்ட் மட்டுமே கிடைக்கும். சந்தேகம் வேண்டாம்.
எனவே மிகப் பெரிய வெற்றி உங்களுக்கு வரும் தேர்வில் கிடைக்க வேண்டுமா? ஒழுக்கமாக இருங்கள்...

Monday, March 2, 2015

பள்ளியை மாணவன் தேர்ந்தெடுக்க வேண்டுமா? மாணவனை பள்ளி தேர்ந்தெடுக்க வேண்டுமா? ....
சமீபத்தில் நான் சந்தித்த பெற்றோர்கள் சிலரின் பேச்சு, என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படிக்க வைக்கத்தான் குழந்தைகளையே பெற்றுக்கொண்டார்கள் போல இருக்கிறது.
அவர்கள் பேச்சிலிருந்து அப்படித்தான் உணர்ந்தேன்.
ப்ரீ கே.ஜி அட்மிஷன் கிடைத்த அன்று அவர்கள் தங்கள் பிறவிப்பயனை அடைந்துவிட்டது போல நடந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு லட்சியம் இருக்கிறது. அது பணம் சேர்ப்பதாக இருக்கலாம். சிறந்த தலைமுறையை உருவாக்குவதாக இருக்கலாம்.
அதே போல ஒவ்வொரு பெற்றொருக்கும் தன் குழந்தைகள் குறித்து ஒரு கனவு இருக்கிறது. அது அதிகம் பணம் சம்பாதிப்பவனாக தன் குழந்தை இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். அல்லது அந்த தலைமுறையிலேயே தலைசிறந்தவராக தன் குழந்தை இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் லட்சியத்தை நிறைவேற்றித்தரும் கல்வி நிலையத்தையே நாடுகிறார்கள்.
மார்க் பள்ளிகளுக்கே மவுசு அதிகம்
பெரும்பாலான பெற்றோர்கள் அவநம்பிக்கையிலிருந்துதான் முடிவெடுக்கிறார்கள். "நாம்தான் சரியாக படிக்கவில்லை. நம் குழுந்தைகளுக்கு நல்ல கல்வியை தந்துவிட்டால் நாம் படும் கஷ்டமெல்லாம் அவர்கள் படமாட்டார்கள்" என்று உறுதியாக நினைக்கிறார்கள்.
கல்விக்கும் வாழ்க்கை வெற்றிக்கும் பெரிய தொடர்பில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது படித்துவிட்டால் பொருளாதார ரீதியாக ஒரளவு நிச்சய வெற்றி என்று நம்புகிறார்கள்.
அதனால் மார்க் எடுக்க வைத்து மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பும் பள்ளிகள்தான் பலரின் முதல் தேர்வு.
அடுத்தது சமூக அந்தஸ்து.
ஈரோட்டில் ஒரு சமூகத்தில் யாராவது மரணமடைந்துவிட்டால் எல்லோருக்கும் எளிதாக தெரிவிக்க மரண அறிவிப்பு செய்வார்கள். கடைசி வரியில் பிரிவால் வாடுபவர்கள் பட்டியல் இருக்கும். அதில் எல்.கே.ஜி படிக்கும் பேரன் பெயர் அவன் படிக்கும் பள்ளியின் பெயரோடு வரும்.
காரணம் விசாரித்தபோது சொன்னார்கள் , "டாக்டர் என்பதை எப்படி கௌரவத்திற்காக போட்டுக்கொள்கிறோமோ அதே போல அந்தப் பள்ளியில் படிப்பது ஒரு கௌவரம் இல்லையா? அதனால்தான் அப்படி போட்டுக்கொள்கிறோம்."
அரசுப்பள்ளிகளை பலரும் தவிர்ப்பதற்கு கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு மட்டும் காரணமில்லை. கௌரவம்?
இதைப்புரிந்து கொள்ள உங்கள் குழந்தை அரசுப்பள்ளியில் படிக்கிறது என்று ஐம்பது பேரிடம் சொல்லிப்பாருங்கள். உங்களைப் புழுவைப்போல பார்ப்பார்கள்.
பல பெற்றோர்களுக்கு பள்ளி என்பது அவர்கள் சமூக அந்தஸ்தை சொல்லும் ஒன்று.
அடுத்தது தீண்டாமை
தங்கள் குழந்தைகள் எந்த மாதிரியான குழந்தைகளோடு பழக வேண்டும் என்பதும் கல்வி நிலையத்தை தீர்மானிக்கிற விஷயமாக இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களோடு அல்லது சாதாரணப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களோடு படித்தால் தகாதவார்த்தைகள் (Bad Words) பேசக்கற்பார்கள் என்று தீண்டாமையை வேறுவிதமாக சொல்வார்கள்.
இதெல்லாம் பெற்றோர்கள் கல்வி நிலையத்ததை தேர்ந்தெடுக்கும் விதம்.
அடுத்து கல்வி நிலையங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம்.
முதலிடம் பணத்திற்குத்தான்.
பெற்றோர்கள் விரும்பும் வசதிகளை ( நன்றாக கவனியுங்கள் மாணவர்கள் விரும்பும் வசதியை அல்ல) செய்துவிட்டு அதற்கு ஏற்ற கட்டணத்தை தருகிற பெற்றொர்களின் குழுந்தைகளுக்குத்தான் முதலிடம்.
அடுத்து முதலுக்கு முதலிடம்
முதலிடம் உங்களுக்கு தெரியும். இரண்டாமிடம் கூட உங்களுக்கு தெரியும். ஆனால் முதலுக்கு முதலிடம் உங்களுக்குத் தெரியாது. அது கல்வி நிலையம் நடத்துகிறவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
அதாவது போட்ட முதலுக்கு ஏற்ற கூடம் வரவேண்டும் என்பதால் விருப்பம் இல்லாமல் சிலரை சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் பணம் கட்ட முடியாவிட்டாலும் நல்ல மார்க் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் மாநிலத்தில் முதலிடம் என பெயர் எடுத்து தங்கள் பள்ளிக்கு நல்ல அட்மிஷனை சேர்த்துக்கொடுக்க கூடிய நன்றாக படிக்கும் மாணவர்கள்.
அரசுப்பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் இலவசமாக சேர்த்துக்கொள்வது இவ்விதம்தான்.
அடுத்த இடம் நன்றாகப் படிக்கும் மாணவர்கள்.
நன்றாகப்படிக்க வைக்கத்தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று நீங்கள் பழங்கதை பேசலாம். இன்றைக்கு பல பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றாக படிக்கத் தெரிந்தவர்களுக்கு பாடம் நடத்துகிற அளவுக்குத்தான் தெரியும். அதனால் நன்றாகப் படிக்கக்கூடியவனா என்று சோதித்துத்தான் சேர்த்துக்கொள்வார்கள்.
அடுத்தது ஆசிரியப் பெற்றோர்கள்.
அதாவது பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிலும் படிக்க வைக்க வேண்டும்.
எப்போதாவது கரும்பு ஜீஸ் கடையில் கரும்பு பிழிவதைப் பார்த்திருக்கிறீர்களா? சக்கையாகும் வரை பிழிவார்கள். சரி நைந்து விட்டது தூக்கிப்போட்டுவிடுவார்கள் என்று நாம் நினைக்கும்போது அதையும் பிழிவார்கள். அதைப்போல இவர்கள் நைந்து போகும் அளவிற்கு பள்ளியில் கற்றுத்தருவார்கள். அதன் பிறகு கசங்கிப்போகும் வரை குழந்தைகளை வீட்டிலும் வைத்து பிழியத் தெரியும் வித்தை தெரிந்த பெற்றோர்களாய் இருந்தால் சீட் நிச்சயம்.
இன்று பெற்றோர்கள் சில பள்ளிகளுக்கு ஆசைப்படுகிறார்கள். அலையாய் அலைகிறார்கள். அட்மிஷனுக்கு ஆள்பிடிக்கிறார்கள். பணத்தை கொட்டுகிறார்கள். ஆனால் பள்ளிகள்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
பாடப் பரிவுகளை தேர்ந்தெடுப்பது போல, என்று மாணவர்கள் பள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வருகிறதோ ? அன்றுதான் மாணவர்களுக்கு பிடித்த மாதிரி சுவைபட கல்வியை வழங்கும் முயற்சிகளை பள்ளிகள் மேற்கொள்ளும்.

Thursday, February 19, 2015

ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?
ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.
இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும்
அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும்.
தமிழை முழுமையாக தெரிஉந்து கொண்டு பின்னர் ங்கிலத்தை படியுங்கள்.ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அறுவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது.
தமிழுக்காக போராட வேண்டாம் வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ?
உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக
உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய்
மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும்
தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விடயமா?
தமிழின்
சிறப்புகளை இங்கே உணர்த்துவதே எமது நோக்கம்.
தமிழின் சில சிறப்புகளை இங்கே காணலாம்.
தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில
சிறப்புகள் உண்டு.
தமிழ் மொழி மற்ற
எல்லா மொழிகளையும் விட மிக எளிமையானது.
ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக்
கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி.
இன்றைக்கு ஆங்கிலத்தை பெருமையாக
நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும்.
வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட மொழி,
ஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி,
ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ்
அப்படி இல்லை.
வாழ்வியல், அறிவியல் என
அனைத்து பரிமாணங்களையும்
உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி.
அதற்கு ஒரு சில சான்றுகளை இங்கே காணலாம்.
ஆங்கிலத்தில் ‘BOOK’ என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள்
B – பி, o – ஒ, o – ஒ, k – கே. அதாவாது பிஓஓகே என்ற
எழுத்துக் கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது.
இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான
ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம்.
ஆனால்
தமிழில் இதையே புக் என எழுத முடியும்.
அடுத்ததாக ‘ARAVAIND’ என்ற சொல்லை அரவிந்த்
என்று உச்சரிக்கிறோம் ஆனால் ‘ANGEL’ என்ற
சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே ‘A’
என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப ‘அ’ என்றும் ‘ஏ’
என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.
ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற
பாகுபாடே இல்லை. ‘BEE’ என்ற சொல்லில்
இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது,
அதே சமையம் ‘LARGE’ என்ற சொல்லில்
குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள ‘BOOK’ என்ற சொல்லில்
இரு குறில்கள் வந்தாலும்
அது குறிலாகவே நிலைப்பெறுகிறது.
வெறும் 26
எழுத்துக்களே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட
மொழி ஆங்கிலம். அதனால் தான் ஒரே எழுத்துக்கு பல
உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன.
ஆங்கில
மொழியின் உயிர் எழுத்துக்கள் வெறும் 5
எழுத்துக்களே ‘A, E, I, O, U’ மீதம் உள்ள 21
எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்கள் எனக்
கொள்ளலாம். ஆனால் இவை மட்டும் ஒரு மொழியின்
தேவையை பூர்த்தி செய்து விட முடியாது.
ஆங்கிலத்தில் மெய் எழுத்துக்களே கிடையாது,
ஆனாலும் ஒரு சில நேரங்களில் ‘Consonents’
என்று சொல்லப்படும் ஆங்கில உயிர் மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்களாக தோன்றும். உதாரணமாக “PARK”
என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது ‘R’
மற்றும் ‘K’ என்ற எழுத்துக்கள் மெய் எழுத்துகளாகத்
தோன்றுகின்றன.
ஆக தோழர்களே இவ்வளவு குழப்பங்களும்,
குறைபாடுகளும் உள்ள ஆங்கில
மொழி உங்களுக்கு சிறப்பானதா?, எளிதானதா?.
உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன்
பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ்
மொழி எப்படி தாழ்ந்து போகும். சிந்தியுங்கள்.
மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்,
அவசியத்திற்கு ஆங்கிலம், அடையாளமாய்த் தமிழ்!
உயர்கல்வியின் தரம் உயர சில ஆலோசனைகள்:
நம் கல்வியின் தரத்தை மாற்ற வேண்டும், ஏற்றி உயர்த்த வேண்டும் என்று சொன்னால், தற்போது உள்ள யு.ஜி.சி. என்ற அமைப்பு உடனே ஒரு கமிட்டியைப் போடுகிறது. கமிட்டியிடம் இருந்து பரிந்துரையைப் பெறுகிறது. அப்பரிந்துரைகளைப் பல்கலைக்கழகம் அனைத்திற்கும் அனுப்பி வைக்கிறது. பல்கலைக்கழகம் தன் கீழ் உள்ள பாடக்குழுவுக்கு அனுப்பி வைக்கிறது.
பாடக் குழுவில் மாற்றம் செய்துவிட்டால் போதுமா? வேறு சில மாற்றங்களையும் மிகக் கட்டாயம் செய்யவேண்டும். பழைய பல்கலைக்கழக நல்கைக் குழு (யு.ஜி.சி.) கலைத்துவிட்டு புதிய கல்விக்குழு ஒன்று அமைக்கவேண்டும் என்ற முயற்சியில் இந்திய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளிவருகிறது. இது மிக நல்ல செய்தி. தற்போதுள்ள யு.ஜி.சி. இங்கிலாந்தில் உள்ள யு.ஜி.சியைப் பார்த்து அப்பட்டமாகச் செய்த காப்பி.
நம் தேவை என்ன என்பதை அறிந்து நமக்கு நாமே கல்விக்குழு ஒன்றை அமைத்தாக வேண்டும். இந்திய சுதேசியத் தேவையைப் படித்தறிய வேண்டும். இதற்குச் சரியான பாடப்புத்தகம் காந்தி அடிகள் ஒருவரே. நமக்கு ஐரோப்பிய - அமெரிக்கக் கல்வி முறை வேண்டாம். நமக்குத் தேவையான இந்தியக் கல்வி முறை ஒன்று தேவை.
கி.பி. 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் ரோமானியர்களை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கிளர்ச்சி வெடித்தது. அப்போது கல்வி மொழியாக இருந்த இலத்தீன் மொழி அந்தந்த பகுதிகளில் இருந்து வெளியேற நேர்ந்தது. அடுத்த கணமே அந்தந்த வட்டாரத்தில் இருந்து வந்த மண்ணின் மொழிகள் அனைத்து இடங்களிலும் இடம்பிடித்தன. குறிப்பாக, கல்விக்கூடங்களில் இடம்பிடித்தன.
ஒவ்வொரு நாட்டிலும் பள்ளிக்கல்வி தொடங்கி பல்கலைக்கழகக் கல்வி வரை அவரவர் தாய் மொழிகளிலேயே பயிற்றுவிக்கப்பட்டது. தாய்மொழி வழிக் கற்ற அம்மக்கள் இடையே சிந்தனையும் புதிய போக்கில் செயலாற்றும் திறமும் வந்து சேர்ந்தன.
தமிழரைப் பொறுத்த அளவிற்கு இத்தகு கருத்துப் புரட்சி அவர்கள் வரலாற்றில் நிகழவே இல்லை. பரிணமிக்கவும் இல்லை. பழைய பாதைகளிலேயே அவர்கள் தொடர்ந்தார்கள். தொடர்ந்து தமிழர்களை 15, 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஐரோப்பியர் ஆட்சி பற்றிக் கொண்டது. விளைவாக, ஐரோப்பியர்கள் வழி கல்வி, கலாசாரம் ஆகியன இந்தியர்களைப் பற்றத் தொடங்கின.
ஒரு கல்லூரி தொடங்க என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதைக் கல்லூரி தொடங்கும் வள்ளல்களைக் கேட்டால்தான் தெரியும். விண்ணப்பம் போடுவது தொடங்கி, நேரில் வந்து இடம் பார்த்து தடம் பார்த்து அதிகாரிகள் ஒப்புதல் வாங்கும் வரை அலைச்சல்.
அனுமதிக்காக அங்கங்கே அன்பளிப்பும் இன்னபிறவும் கொடுத்தாகவேண்டிய கட்டாயம். கல்லூரியில் பணி செய்வதற்காக நல்லாசிரியர்களைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினம்.
பல்கலைக்கழக நல்கைக்குழு அறிவித்துள்ள ஊதியத்தைத் தொடக்கத்திலேயே கொடுப்பது என்றால், இன்றைய நிலையில் எவரும் கல்லூரி தொடங்கவே முடியாது. நாம் கொடுக்கும் ஊதியத்தை ஏற்றுக்கொள்ளும் ஆட்களைத் தேடவேண்டி இருக்கிறது. வருகின்ற ஆசிரியர் தகுதிக் குறைவு உள்ளவராக இருந்தாலும், தாங்கிக்கொள்ள வேண்டும்.
ஜூன் ஜூலையில் தொடங்கி, மார்ச் - ஏப்ரல் வரை கல்வியாண்டை முடிப்பதற்குள் நிர்வாகத்தாரின் பாடு சொல்லும் தரமல்ல. எனவே, மொத்தத்தில் நம் கல்விதரம் தாழ்ந்து கிடக்கிறது.
இன்று இந்தியாவில் ஏறக்குறைய 213 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அண்மையில் இரண்டு புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டன. ஒன்று உலகில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்துவது. இன்னொன்று ஆசியப் பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்துவது.
உலகத் தரவரிசையில் இருநூறு பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் அதன் தரவரிசையையும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்கள். அவற்றுள் ஒரு பல்கலைக்கழகம் கூட இந்தியப் பல்கலைக்கழகமோ, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகமோ இடம்பெறவில்லை.
ஆசியாவில் மிகச்சிறந்த நூறு பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப் பெற்றுள்ளன. இவற்றுள் ஒன்றுகூட இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் இல்லை. சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம் முதலாயின இடம்பெற்றுள்ளன. அப்பட்டியலை அண்மையில் புதுப்பித்து, வேறு ஒன்று வெளியிட்டபோது கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி. மட்டும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள 32 மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் கல்லூரிகள் மிகுதியாக உள்ளன. பொறியியல் கல்லூரிகள் 574. கலை அறிவியல் கல்லூரிகள் 807. கல்வியியல் கல்லூரிகள் 531. பாலிடெக்னிக் கல்லூரிகள் 501. ஆக, 2,413 கல்லூரிகள். 1,55,914 ஆடவர்களும் 1,66,671 பெண்டிரும் ஆக மொத்தம் 3,22,585 மாணவ}மாணவியர் பயில்கின்றனர். 19,639 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றார்கள்.
தமிழ்நாடு அரசு 1999இல் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அடிப்படைப்படி ஏறத்தாழ 20 ஆயிரம் கல்லூரி ஆசிரியர்கள் ஒவ்வோர் ஆண்டும் என்ன செய்கிறார்கள்? எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுகிறார்கள்? அவற்றுள் எத்தனை கட்டுரைகள் இந்தியாவிற்கு வெளியே உள்ள ஆராய்ச்சி இதழ்களில் வெளியாகி உள்ளன? அவை அறிஞர்களால் மேற்கோள் காட்டப்படுகின்றனவா?
வியன்னாவில் 1,365 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 68,000 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகளைத் தாங்கிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் வெளிவந்துள்ளன.
இந்தியப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் படிக்கிறார்களா, எழுதுகிறார்களா ஆகியன அர்த்தமுள்ள கேள்விகளாகும். நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்து படித்து வரும் மாணவர்களைப் பற்றி ஒரு செய்தி அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது.
நம் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் எம்.பி.ஏ. பட்ட மாணவர்களில் 10 சதவீதம் பேரே வேலைக்குத் தகுதி உள்ளவர்களாகவும், உலகத் தரத்துக்குச் சமமானவர்களாகவும் உள்ளனராம். மற்றவர்களையெல்லாம் என்ன சொல்வது?
உயர்கல்வியின் தரம் உயர சில ஆலோசனைகள்:
1. கல்வி முறையை உயர்த்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட உடனே பெரும்பாலும் மாற்றப்படுவது இருக்கின்ற பாடத்திட்டம்தான். இதுமட்டும் போதவே போதாது.
2. நம் கல்வி முயற்சிகள் பாழாவதற்கு முதல் பெரும் காரணம் நாம் தற்போது கடைப்பிடிக்கும் ஆசிரியர் நியமன முறையும் ஆசிரியர் பதவி உயர்வு முறையும். இவற்றில் பிறந்த ஜாதி, அதன் வழி கடைப்பிடிக்கப்படும் ஒதுக்கீட்டு முறை ஆகியவற்றை மட்டும் பின்பற்றுகிறோம். இதில் மாற்றம் தேவை.
3. ஆசிரியரின் பதவி உயர்வு முறையில் விரிவுரையாளர் பதவியில் இருந்து ரீடர், ரீடரிலிருந்து பேராசிரியர் என்பதை முற்றுமாக மாற்றி, பணியாற்றும் காலத்தில் அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் அவற்றிற்காக அவர் பெற்ற பரிசுகள், பாராட்டுகள் முதலாயின முன்னுரிமை பெற வேண்டும்.
4. பிரான்ஸ் முதலான நாடுகளில் இருப்பது போல அரசு அளிக்கும் விடுமுறையைத் தவிர, வேறு எந்த விடுமுறையும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பெறுதல் கூடாது. விடுமுறை எடுத்தால் ஊதியத்தை வெட்டும் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
5. பல்கலைக்கழகங்கள் பல்குவதாலேயே தரம் உயர்ந்துவிடப் போவதில்லை. சென்னைப் பல்கலைக்கழகம் ஒன்றே பரந்து விரிந்த சென்னை மாகாணம் முழுதுக்கும் (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா) இருந்தபோது அப்பல்கலைக்கழகத்தில் இருந்து படித்து வெளிவந்த பட்டதாரிகள் மிகத் தகுதி உடையவர்களாக இருந்தார்கள். அமெரிக்க மாடலைப் பின்பற்றிக் கல்வி ஆண்டை இரண்டு பருவங்களாகப் பிரித்தோம். வினாத்தாள், விடைத்தாள் முறையையும் மாற்றினோம் மைய மதிப்பீடும் கொண்டு வந்தோம். கொண்டு வந்த பிறகு, கல்வித் தரம் தாழ்ந்துவிட்டது என்பதே உண்மை.
6. பிஎச்.டி. பட்டத்திற்குப் பதிவு பண்ணும் வழிமுறைகளை நம் பல்கலைக்கழகங்கள் தளர்த்திவிட்டன. ஏ.எல். முதலியார் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, பிஎச்.டி. விதிகளும் பிஎச்.டி. ஆய்வேட்டைத் திருத்தும் விதிகளும் மிகத் தரமாக இருந்தன.
வட இந்தியப் பல்கலைக்கழகளைப் பார்த்து தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் விதிகளைத் தளர்த்தின. பிஎச்.டி. எண்ணிக்கை மிகுந்ததே தவிர தரம்
உயர்ந்ததா?
அக்காலங்களில் ஆய்வேடு அனைத்தும் ஆங்கிலத்தில்தான் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அதனை மாற்றித் தமிழிலும் வழங்க அனுமதித்தோம். அதற்குத் தக, ஆய்வேட்டின் தரத்தில்
மாற்றம் ஏற்பட்டதா, ஆழம் வந்துற்றதா என்றால் இல்லை.
அக்காலங்களில் பிஎச்.டி. பட்டம் பெற்ற மு.வ., மா. இராசமாணிக்கனார், துரை. அரங்கனார் முதலானோரோடு இக்கால பிஎச்.டி.க்களை ஒப்பிட முடியுமா? முடியவே முடியாது. பிஎச்.டி. ஆய்வேட்டைத் திருத்துவோரில் ஒருவர் வெளிநாட்டாராகவே இருத்தல் வேண்டும் என்பது பழைய நடைமுறை. அந்த முறையையும் எடுத்துவிட்டோம். நாம் செய்த மாற்றங்கள் ஏற்றங்களைத் தரவில்லை.
கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
இந்தியாவில் கல்வித் துறையின் பரிதாபகரமான நிலை!
இந்தியாவில் பள்ளிக் கல்வியின் பரிதாபகரமான நிலையை அண்மையில் வெளியிடப்பட்ட "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' படம்பிடித்துக் காட்டுகிறது. மூன்றாம் வகுப்பில் 75 சதவீதத்தினர், 5-ஆம் வகுப்பில் 50 சதவீதத்தினர், 8-ஆம் வகுப்பில் 25 சதவீதத்தினர் 2-ஆம் வகுப்புப் பாடத்தை சரியாகப் படிக்கக் கூட முடியவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
அதேபோல, 3-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் இரண்டு இலக்க கழித்தல் கணக்குகளையும், 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் வகுத்தல் கணக்குகளையும், 8-ஆம் வகுப்பு மாணவர்களில் 56 சதவீதத்தினரால் 3 இலக்க எண்களை ஓர் இலக்க எண்ணால் வகுக்கும் கணக்குகளையும் போட முடியவில்லை.
19.5 சதவீத 2-ஆம் வகுப்பு மாணவர்களால் 9 வரையுள்ள எண்களை அடையாளம் காண முடியவில்லை. 75 சதவீத 5-ஆம் வகுப்பு மாணவர்களால் எளிமையான ஆங்கில வாக்கியங்களைப் படிக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) மிகமிகக் குறைவான தொகையே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. 1966-இல் கோத்தாரி கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றது.
அதன்படி, 1985-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2001 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 3.1 முதல் 3.8 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டது.
மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கல்விக்கு 2010-11-இல் 2.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை 2011-12-இல் 3.57 லட்சம் கோடியாகவும், 2012-13-இல் 4.10 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. 1951-52-இல் கல்விக்கு ரூ.64.46 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.64 சதவீதமாகும்.
இது 2010-11-இல் 2.97 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05 சதவீதமாகும். இந்த காலகட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது. உலகில் உள்ள 124 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்குக் கட்டடங்கள் கட்டுதல், வகுப்பறைகள் கட்டுதல், ஆசிரியர்கள் நியமித்தல், பாடப் புத்தகங்கள், மற்ற வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' தெரிவிக்கிறது.
இதற்கு இணையாக 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கல்விக்காக செலவழிக்கப்படும் அதிக நிதியால், நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. கல்வி தொடர்பாக 2014-இல் மத்திய அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவர அறிக்கையில், இந்தியாவில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கற்பிக்கும் 14,25,564 கல்வி நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 7,90,640 தொடக்கப் பள்ளிகளும், 712 பல்கலைக்கழகங்களும், 36,671 கல்லூரிகளும், பட்டயக் கல்வி வழங்கும் 11,445 நிறுவனங்களும் அடங்கும்.
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 82.68 லட்சமாகும். இதில் 26.84 லட்சம் பேர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். 25.13 லட்சம் பேர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள். 12.86 லட்சம் பேர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். 17.85 லட்சம் பேர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.
நாட்டில் உள்ள அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஆசிரியர்கள் ஆவர். சுமார் 160 நாடுகளில் நமது நாட்டில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிட குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் தொகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் ஒருபுறம் இருப்பினும், மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கல்வி கற்கும் சூழல் பள்ளிகளில் இல்லை. மத்திய அரசு 2013-14-இல் தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, 5-ஆம் வகுப்புக்கு முன்னரே 19.8 சதவீத மாணவர்கள் வெளியேறுகின்றனர். 8-ஆம் வகுப்புக்கு முன்னர் 36.3 சதவீதத்தினரும், 10-ஆம் வகுப்புக்கு முன்னர் 47.4 சதவீதத்தினரும் கல்வியைக் கைவிடுகின்றனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால், 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை, 8 கோடி குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே கைவிடுகின்றனர். இந்த நிலையை "தேசிய அவசரநிலை' என்று வர்ணிக்கிறது ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் அமைப்பு.
குழந்தைகள் இடைநிற்றலுக்கு ஆசிரியர்களும் ஒரு முக்கியமான காரணம் என்பது வேதனை தரும் அம்சமாகும். வகுப்பறைகளில் சுமார் 850 மணி நேரம் ஆய்வு செய்த பின்னர், மாணவர்களுக்கு உகந்த நடைமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை என கல்வி தொடர்பான வருடாந்திர ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.
உடல்ரீதியாகத் துன்புறுத்துவது முதல் வகை. இதில், சுவர் அருகே நாற்காலி போல நிற்கவைப்பது, தலையில் புத்தகப் பைகளை சுமக்க வைப்பது, கடும் வெயிலில் நாள் முழுவதும் நிற்கவைப்பது, முட்டிபோட்ட நிலையில் பணிகளை செய்யச் சொல்வது, மேஜையின் மீது ஏறி நிற்கச் சொல்வது, கைகளைத் தூக்கிக் கொண்டு நிற்கச் சொல்வது, வாயில் பென்சிலை வைத்துக் கொண்டு நிற்கச் செய்வது, கால்களுக்கு இடையில் கையை நுழைத்து காதுகளைப் பிடித்துக் கொண்டு நிற்க வைப்பது, மாணவர்களின் கைகளைக் கட்டுவது, உட்கார்ந்து எழுந்திருக்க வைப்பது, பிரம்பால் அடிப்பது, காதுகளைத் திருகுவது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2-ஆவது வகையானது, உணர்வு ரீதியான துன்புறுத்தலாகும். இதில், எதிர் பாலினத்தைச் சேர்ந்தவரை வைத்து அறையச் சொல்லுதல், திட்டுதல், அவமானப்படுத்துதல், மாணவரின் நடத்தைக்கு ஏற்ப பட்டப் பெயர் சூட்டி, பள்ளியைச் சுற்றிவரச் செய்தல், வகுப்பறையின் பின்னால் நிற்கவைத்து பாடங்களை முடிக்கச் சொல்லுதல், ஓரிரு நாள்களுக்கு பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்வது, "நான் ஒரு முட்டாள்', "நான் ஒரு கழுதை' என எழுதப்பட்ட காகிதத்தை மாணவரின் முதுகில் ஒட்டுவது, ஒவ்வொரு வகுப்பறைக்கும் மாணவரை அழைத்துச் சென்று அவமானப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
3-ஆவது வகையானது எதிர்மறையான உணர்வுகளைப் பதியச் செய்வதாகும். இதில், உணவு இடைவேளை நேரங்களில் வகுப்பறையிலேயே அமரவைத்தல், இருட்டறையில் மாணவர்களை அடைத்துவைப்பது, பெற்றோரை அழைத்து வரச் சொல்லுதல் அல்லது பெற்றோரிடம் இருந்து விளக்கக் கடிதம் பெற்றுவரச் சொல்லுதல், வீட்டுக்குப் போகச் சொல்லுதல் அல்லது பள்ளி வாயிலுக்கு வெளியே நிற்கவைத்தல், வகுப்பறையில் தரையில் மாணவரை அமர வைத்தல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யச் சொல்லுதல், பள்ளிக் கட்டடத்தையோ அல்லது மைதானத்தையோ சுற்றி ஓடிவரச் சொல்லுதல், பள்ளி முதல்வரைச் சந்திக்கச் சொல்லுதல், வகுப்பறையில் பாடம் எடுக்கச் சொல்லுதல், ஆசிரியர் வரும்வரை நிற்கச் சொல்லுதல், வாய்மொழியாக எச்சரிக்கை விடுப்பது அல்லது டைரியில் குறிப்பு எழுதி அனுப்புதல், மாற்றுச் சான்றிதழை (டி.சி.) அளித்துவிடுவேன் என்று மிரட்டுதல், விளையாட்டு அல்லது மற்ற நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுப்பது, மதிப்பெண்களைக் கழிப்பது, 3 முறை தாமதமாக வந்தால் ஒரு நாள் விடுப்பு என்று கூறுவது, அதிகப்படியான வீட்டுப் பாடங்கள் செய்துவரச் சொல்வது, அபராதம் விதிப்பது, வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுப்பது, ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் முழுவதும் ஒரு பாடவேளைக்கு வகுப்பறையில் தரையில் அமர வைப்பது, நடத்தைக்கான அட்டவணையில் கருப்புக் குறியிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.
இதைவிட வேதனை தரும் அம்சம் என்னவென்றால், மாணவர்களை பாலியல் ரீதியாகவும் ஆசிரியர்கள் துன்புறுத்துவதுதான். குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை நமது நாட்டுச் சட்டம் அனுமதிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்திலும் குழந்தைகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச அமைப்புகளும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இதேவிதமான கருத்தையே பிரதிபலிக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் மனித உரிமைகள் பொதுவானது என்பதை ஐ.நா. சபையின் குழந்தைகளின் உரிமைகள் அமைப்பு உறுதிப்படுத்துகிறது.
மேலும், குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கென்று தனி உரிமைகள் உள்ளன என்றும் ஐ.நா. வலியுறுத்துகிறது.
துரதிருஷ்டவசமாக, இந்தச் சட்டங்கள் பற்றியும், விதிமுறைகள் பற்றியும் கவலைப்படாமல், ஆசிரியர்கள் குழந்தைகளைத் துன்புறுத்தி பள்ளியை விட்டே ஓடச் செய்கிறார்கள். ஐ.நா. சபை மேம்பாட்டுத் திட்டம் 2012-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் பள்ளியில் மாணவர் படிக்கும் சராசரி ஆண்டுகள் 4.4 ஆகும்.
இதுவே, இலங்கையில் 9.3 ஆண்டுகளாகவும், சீனாவில் 7.5 ஆண்டுகளாகவும், பாகிஸ்தானில் 4.9 ஆண்டுகளாகவும், வங்கதேசத்தில் 4.8 ஆண்டுகளாகவும் உள்ளன.
கடும் போட்டியையும், தேர்வு முறையையும் சந்தித்துதான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வாகின்றனர். எனவே, அவர்கள் அதிக தகுதிகளைப் பெற்றிருப்பது இயற்கையானதாகும். அவர்களுக்கு நல்ல ஊதியமும், பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், அவர்களது கடமைகளையும், மாணவர்களின் உரிமைகளையும் ஆசிரியர்களுக்குப் புரியவைப்பதற்கு மன உறுதிதான் தேவை.
அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துவருவது குறித்து அரசு அதிகாரிகளோ அல்லது அரசியல் கட்சியினரோ கவலைப்படுவதில்லை. ஏனெனில், அவர்களது குழந்தைகள் இத்தகைய பள்ளிகளில் படிக்காததால் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் இழப்பு எதுவும் இல்லை.
அப்படி எனில், குற்றவாளிகள் யார்? நெறிதவறிய ஆசிரியர்களா, அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாகச் செயல்படும் உயர் அதிகாரிகளா, அவர்களை இயக்கும் அரசியல்வாதிகளா அல்லது அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நாம்தானா?
பாலியல் குற்றங்களின் பங்காளி மொபைல்போன்...!
'6ம் வகுப்பு மாணவி கொலை: சக மாணவன் கைது; எல்.கே.ஜி., மாணவி, பள்ளி வளாகத்தில் பலாத்காரம்; ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த மாணவன் கொலை: நண்பனுக்கு வலை; 9ம் வகுப்பு மாணவி, காதலனுடன் மாயம்; பள்ளிச் சிறுமி பலாத்காரம்: ஆசிரியர் கைது!' -இவை எல்லாம், சமீபகாலமாக நாளிதழ்களில் இடம்பிடித்த, பாலியல் வன்மச் செய்திகள் சிலவற்றின் தலைப்புகள். இந்த அவலச்செய்திகளை வாசிக்கும் பலரின், குறிப்பாக, பெற்றோரின் மனதில் ஒருவித அச்சமும், பீதியும் எழுகிறது.
பால்மணம் மாறா பள்ளிப் பிஞ்சுகளிடம் கூட, பாலியல் வன்மத்தில் ஈடுபடும் படுபாதக பாவிகளை, நீதியின் முன்நிறுத்தி, கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில், எள்முனையளவும் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. அதேவேளையில், இதுபோன்ற பாலியல் வக்கிர குற்றங்களின் எண்ணிக்கை கூடுவதற்கான காரணிகளை யாரும் ஆராய்வதில்லை. பாலியல் வன்மம் பரவ, குற்றவாளிகள் மட்டுமா காரணம்? இந்த சமூகமும், சமூகத்தை வழிநடத்தும் அரசு அமைப்பும் தான். இன்றைய இளைஞர்களை, குறிப்பாக, பிஞ்சுகளின் மனதை நஞ்சாக்கும் விதமான பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய, அனைத்து, 'ஆபாச கருமாந்திர காட்சி'களும் கையடக்க சாதனத்திலேயே கண்டுகளிக்கும் வசதிகளும் பெருகிவிட்டன. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, ஆபாச படங்கள், ஊர், ஊருக்கு குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டும், 'காலைக் காட்சி'யாக காண்பிக்கப்படும்; 'திரையிடல் விதி'களை மீறி மைனர்களும் போவர்.
எனினும், அந்த துணிச்சல் எல்லாருக்கும் வந்துவிடாது. மதுப்பழக்கமும், அன்றைய இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் இவ்வளவு வெளிப்படையாக இருந்ததில்லை. பாலியல் குற்றங்களும் அதிகம் தலை தூக்கவில்லை. இன்றோ, நிலைமை மிகவும் மாறிவிட்டது. 'பாஸ் மார்க்' எடுக்கும் அளவுக்காவது படித்து, மானத்தை மகன் காப்பாற்றுவான் என, பள்ளிக்கு பிள்ளையை அனுப்பி வைத்தால், 'டாஸ்மாக் பாரில்' மது குடித்து மயங்கிக் கிடக்கும் அவலம் இந்த மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தெருவுக்குத் தெரு திறந்து கிடக்கும் மதுக்கடைகள், மனித குலத்தின் மாண்பை கெடுக்கின்றன; மானத்தை வாங்குகின்றன.
இளைஞர்களை சீரழிக்க இதுபோதாதென்று, மொபைல்போன், இன்டர்நெட் வசதிகள் வேறு. அன்பான பிள்ளைகள் ஆசையாக கேட்கின்றனரே என்று, அதிக விலை மொபைல்போனை வாங்கிக் கொடுத்து அகமகிழ்ந்து கொள்கிறோம். அந்த சாதனத்தை, பிள்ளைகள் எப்படி, எதற்காக பயன்படுத்துகின்றனர் என்பதை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை.கேட்ட போதெல்லாம், 'பாக்கெட் மணி' கொடுத்து, படுபாதாளத்தில் பிள்ளைகள் விழ பாதையும் வகுத்துக் கொடுத்து விடுகிறோம். கையடக்க அலைபேசியில், பரவிக்கிடக்கும் வலைதள ஆபாசங்களை கண்டுகளிக்கும் பிள்ளைகள், காமத்தால் தூண்டப்பட்டு, பாலியல் உறவுக்கு உந்தப்படுகின்றனர். படிப்பதென்ற லட்சியத்துடன் பள்ளியில் சேர்ந்ததை மறந்து, பாடப்புத்தகங்களும் அவர்களுக்கு பாரமாகிப் போகின்றன. பாலியல் வக்கிரத்துக்கு வடிகால் தேடி அலைகையில், அருகிலிருப்போர் அகப்படுகின்றனர். சிறுமியராக இருப்பினும், அவர்களை சீரழிக்க துணிகின்றனர். அதற்கேற்ப, நண்பர்களும் சேர்ந்து விட்டால், நாசமாகிப் போவது வெகுவிரைவில் நடந்தேறுகிறது.
இதற்கெல்லாம் காரணம்... கட்டுப்பாடற்ற சுதந்திரம்; கண்காணிப்பு சிறிதுமற்ற வசதி வாய்ப்புகள்; இவற்றை வாரி வழங்கும் பெற்றோர்.முந்தைய நாட்களில், பள்ளி முடிந்து, மாலையில் சரியான நேரத்தில் வீடு திரும்பிய பிள்ளை... நாளடைவில் தாமதமாக வருவதை பற்றியோ, அவனது தோழமைத் தொடர்புகள் பற்றியோ, பெற்றோரில் பலரும் போதிய அக்கறை காட்டுவதில்லை; அதற்கான நேரமுமில்லை. சதா பொருளாதார கணக்குப் பார்த்து, குடும்பத்துக்கு கூடுதல் பொருள் தேடுவதிலேயே வாழ்க்கையை கழித்து வருகின்றனர். நிலைமை எல்லை மீறிப்போகும்போதுதான் புத்திக்கு உரைக்கிறது, பிள்ளைகள் புதைகுழியில் விழுந்துவிட்டனர் என்று.சாலையோர மரக்கன்றுகளை வளர்க்கும் போது கூட, அவற்றை ஆடு, மாடு மேய்ந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் கூண்டமைத்து கண்காணிக்கிறோம். நமது எதிர்கால, 'கனவுப் பிள்ளை'களை வளர்ப்பதில், கொஞ்சமாவது அக்கறை வேண்டாமா, கண்காணிக்க வேண்டாமா?
பிள்ளைகளின் எதிர்காலம் பாழாய் போக, அவன் அல்லது அவள் மட்டும் காரணமல்ல; இந்த அரசும், சமூகமும் தான். குற்றங்களிலும் இவர்கள் மறைமுகமாக அங்கம் வகிக்கின்றனர் என்பது தானே கண்ணுக்கு புலப்படாத உண்மை. இந்த மறைமுக குற்றப் பங்காளிகளை யார் தண்டிப்பது? பாக்கெட் மணி கேட்கும்போது, முந்தைய நாள் வாங்கிய பணத்தை எதற்காக செலவழித்தனர் என, விசாரியுங்கள். பள்ளி, கல்லூரி முடிந்து, வழக்கத்துக்கு மாறாக, தாமதமாக வீட்டுக்கு வரும் பிள்ளைகள், 'எங்கே போயினர்?' என ரகசியமாக தகவல் சேகரியுங்கள்.
'என்ன படிப்பு படித்தால், எவ்வளவு நோட்டு எண்ணலாம்' என யோசிப்பதுடன், பிள்ளைகளை எப்படி ஒழுங்காக வளர்ப்பது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அளிப்பதும், கண்காணிப்பற்ற நிலையில், நவீனவசதி வாய்ப்புகளை வாரி வழங்குவதும் ஆபத்தில் முடியலாம். பிள்ளைகள் நல்லவர்கள்; அவர்கள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு.
சிறந்த கற்றலுக்கு ஏற்ற சூழல் எது ?
பத்தாம் வகுப்பு .வினாத்தாளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வினாவாக தேர்வு செய்து பயிற்சி செய்துக்கொண்டிருந்தேன்.
ஆங்கிலம் இரண்டாம் தாள்.
மேம் இது எப்படி எழுதறது மேம் என்று வந்தான் ஒரு மாணவன்.
அவன் பின்னே கேட்க தயங்கிக் கொண்டு இருவர் வந்தனர்.
இது பல முறை பயிற்றுவித்த வினா தான். இருந்தாலும் ஆங்கிலத்தில் உரையாடல் அமைக்க வேண்டும் என்றவுடன் நம் பிள்ளைகள் பயந்து விடுகின்றனர்.
உரையாடல் எளிமையாக இருந்தால் போதும்.
உரையாடல் என்பது நம் எண்ணத்தை மற்றவரிடம் பகிரவே, நாம் சொல்ல வருவது அவர்களுக்கு புரிந்தால் போதும் என்பதை பல முறை எடுத்துரைத்தும் அவர்களின் தயக்கம் விட்டபாடில்லை.
அதெல்லாம் நன்றாக படிக்கும் பிள்ளைகள் மட்டுமே எழுத முடியும் என்று நினைத்து சற்று சுமாராக படிக்கும் பிள்ளைகள் தொடுவதேயில்லை.
எல்லா வினாக்களுக்கும் விடை எழுத முயற்சிக்க வேண்டும் என்று சொன்னாலும் இந்த உரையாடல் வினாக்கள் 9,10 இரண்டையும் விட்டுவிடுகின்றனர்.
இது வரை வந்த எல்லா வினாத்தாளிலும் கேட்கப்பட்ட மாதிரி வினாக்களை பயிற்றுவித்தும் இந்த நிலை !எப்படி இவர்களுக்கு இதை கற்பிப்பது ?
நான்கு பிள்ளைகளை அழைத்தேன் கிளம்புங்க என்றேன்.
எங்கே என்றெல்லாம் கேட்காமல் கிளம்பினர் .(அதுதான் ஆசிரியர் தொழிலின் புனிதம் !)
பாதி வழி சென்றதும் சொன்னேன்.
நீங்க கடையில் சென்று ஏதாவது பொருள் வாங்கணும் அதை இங்கிலீஷ் ல பேசி தான் வாங்கணும் என்றேன்.
தங்களுக்குள் கிசுகிசுத்து விட்டு சரிங்க மேம் என்றனர்.
கடைக்காரரிடம் சொன்னேன் .
பசங்க இங்கிலீஷ் பேசுவாங்க நீங்க தமிழே பேசலாம்.அவங்களுக்கு உரையாடல் பயிற்சிக்காக அழைத்து வந்திருக்கிறேன் என்றேன். கடைக்காரரும் ஓகே என்றார்.
நம்ம பையன் ஆரம்பித்தான்.
I want a scale
கடைகாரர் :Long or short ? என்றார்.
Long size !என்றான்.
கடைக்காரர் 'இந்தாப்பா 'என்றார் தமிழுக்கு தாவி !
How much ?என்றான்.
கடைக்காரர் விலையை சொன்னார் .
தேங்க்ஸ் சொல்லி வாங்கி கொண்டான் வெற்றி புன்னகையுடன்!
அடுத்து ஜெகதீஷ் வந்தான்.
நீ என்ன வாங்கறே என்றேன்.
சமோசா என்றான் .
சிரித்து விட்டோம் அனைவரும் .
அதை போகும் போது வாங்கி தருவேன் .இப்போ ஒழுங்கா பேனா வாங்கு என்றேன் .
சரிங்க மேம் என்று பேனா வாங்கினான் .
நால்வரும் பேசி முடித்ததும் கடைக்காரரிடம் நன்றி சொல்லி சமோசா வாங்கி கொடுத்து கூட்டி வந்து ,வரும் வழியில் கேட்டேன், இப்போ புரிஞ்சுதா அந்த டயலாக் எப்படி எழுதணும்னு ?என்றேன் .
ம் சூப்பரா புரிஞ்சது மேம் .இனிமே கொஞ்சம் பெருசா கூட படிச்சு எழுதிடுவோம் என்றனர் நம்பிக்கையுடன் .
சிலவற்றை கற்பிக்க வகுப்பறை சூழலை விட உண்மையான சூழலே கைக்கொடுக்கிறது என்று எண்ணியபடி நடந்தேன் நான் !
அனுபவ பகிர்வு :
திருமதி.D.விஜயலட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை , அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்
திய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில், 1992-இல் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு, தேவைக்கேற்ப அந்தக் கொள்கை பலமுறை திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை அறிவுசார் வல்லரசாக உருவாக்கவும், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான மனிதவள தேவையை நிறைவு செய்யவும், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பள்ளித் தாளாளர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது.
ஆலோசனைகளை அளிக்க விரும்பும் பொதுமக்கள், தங்களுக்குள் குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்கள் பங்கேற்கும் விவாதங்களில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தங்கள் ஆலோசனைகளை
www.mygov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதி மக்களின் ஆலோசனைகள், இந்த ஆண்டு முழுவதும் பெறப்படும்.
பள்ளித் தேர்வு முறையை மறுசீரமைப்பது, கிராமப்புற எழுத்தறிவு விகிதத்தை அதிகப்படுத்துவது, தொழில்கல்வி முறையை நிலைப்படுத்துவது, அறிவியல், கணிதப் பாடங்களை கற்பிப்பதில் புதிய அணுகுமுறையைக் கொண்டு வருவது, மொழிக் கல்வியை மேம்படுத்துவது, உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சீரமைப்பது, மாநில பல்கலைக்கழகங்களையும், இணையவழி கற்பித்தல் முறையையும் மேம்படுத்துவது, உயர் கல்வியில் தனியாரின் பங்களிப்பு, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவது, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிவது உள்ளிட்ட 33 மையக் கருத்துகளின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கைக்கான பொதுமக்களின் ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது